அமைச்சர் பொறுப்பு: தலைமைக்கு தர்மசங்கடம் அளிக்க வேண்டாம்- உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்


அமைச்சர் பொறுப்பு: தலைமைக்கு தர்மசங்கடம் அளிக்க வேண்டாம்- உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 May 2022 9:56 PM IST (Updated: 30 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தலைமை நன்கறியும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்குவதற்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு தர்மசங்கடம் அளிக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்க்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

கழகம் வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து, கழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன்.

கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக்கூட்டங்கள் நடத்துவது, நலத் திட்டப்பணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்.

இந்தச் சூழலில் என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கு அறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.

எனவே, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அவர்களின் வழியில் வந்த நம் கழகத் தலைவர் அவர்கள் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம்! மக்கள் பணியாற்றுவோம்! கழகத்துக்கு கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம்" என்று அதில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






Next Story