நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு


நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
x

உடுமலை பகுதியில் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

திருப்பூர்

உடுமலை பகுதியில் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

தெருநாய்கள்

ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்து வருகிறது. நாய்கள் மட்டுமல்லாமல் பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். உலக அளவில் இந்த நோயால் சராசரியாக ஆண்டுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறப்பதாகவும், அது இந்திய அளவில் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் மேல் உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் தடுப்பூசிகளை போதிய அளவில் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் உடுமலை நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் சமீப காலங்களாக நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் போதிய அளவில் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்படாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

அலைக்கழிப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- உடுமலை நகராட்சியைப் பொறுத்தவரை தெரு நாய்கள் இல்லாத தெருக்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைகளை தெருவில் விளையாட அனுமதிப்பதற்கே அச்சமடையும் நிலை உள்ளது. நாய்கள் அதிக அளவில் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர்.

அங்கு அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக முதலில் வெளி நோயாளிகளுக்கான பெயர் பதிவு செய்து சீட்டு பெற வேண்டும். பின்னர் வரிசையில் நின்று டாக்டரை பார்த்தால், அவர் ஊசி மருந்து எழுதிக் கொடுப்பார். அதனைக்கொண்டு போய் ஊசி போடும் வரிசையில் நின்றால், அங்கிருந்து முன்னால் உள்ள ஒரு செவிலியரிடம் உள்ள நோட்டில் பெயர், ஊர், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய சொல்கிறார்கள். அங்கு சென்று பதிவு செய்து அந்த நோட்டை எடுத்துக்கொண்டு மீண்டும் டாக்டரிடம் சென்று கையெழுத்து வாங்க வேண்டும்.

பின்னர் அந்த நோட்டை செவிலியரிடம் ஒப்படைத்து விட்டு ஊசி போடும் வரிசையில் நின்று முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 2-து டோஸ் தடுப்பூசியை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்டுக்கொள்ள சொல்கிறார்கள். அங்கு சென்றால் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை என்ற பதிலே வருகிறது. எனவே மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் பல கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரேபிஸ் தடுப்பூசி இருப்பு இல்லாததால் உடுமலைக்கு வரவேண்டிய நிலை உள்ளது. எனவே அலைக்கழிப்பில்லாமல் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


Related Tags :
Next Story