''கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம்''


கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம்
x

‘நீட்' தேர்வு விவகாரத்தில் கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் என ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்தார்.

புதுக்கோட்டை

காவிரி மேலாண்மை வாரியம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதால் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதில் அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்கி விரைந்து நிறைவேற்ற வேண்டும். காவிரி நதி நீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை கர்நாடக அரசு மீறுகிறது.

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. இதனை கூட்டணி கட்சியான தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. உரிய தண்ணீரை பெற்ற தி.மு.க. முயற்சி செய்யவில்லை. மத்திய அரசு விவசாயிகளின் நலன் சார்ந்து செயல்படுகிறது. விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 'நீட்' தேர்வு விவகாரத்தில் தி.மு.க. நாடகமாடுகிறது.

அரசியலை புகுத்த வேண்டாம்

மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாடு, பிரமாண்டமாக வெற்றி மாநாடாக, இதுவரை தமிழகத்தில் நடைபெறாத வகையில் பல லட்சம் பேர் கலந்து கொண்டு உள்ளனர். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் நம்பிக்கையை உறுதிபடுத்தி இருக்கின்றனர். இது எங்களது கூட்டணியின் வருங்கால வெற்றிக்கு அடித்தளமாக அமைகின்ற மாநாடாக நான் கருதுகிறேன். பா.ஜ.க. மாநில தலைவர் தொடர் நடைபயணம் என்பது ஆளுங்கட்சிக்கு எதிரானதை விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. 'நீட்' தேர்வை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. கல்வித்துறையில் அரசியலை புகுத்த வேண்டாம்.

தரமான கல்வி

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் 'நீட்' தேர்வு நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு சவால் விடுகிற வகையில் 'நீட்' தேர்வில் சிறப்பாக செயல்படுகின்றனர். மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்வது வேதனையான விஷயம். சில நேரங்களில் பெற்றோரும் பாசத்தில் உயிரை மாய்த்து கொள்வது வேதனையானது. இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்படவே கூடாது. மாணவர்களையும், பெற்றோரையும் அரசியலில் புகுத்தி கல்வியில் குழப்புவது தேவையற்றது. தரமான கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் விழா மற்றும் விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் தமிழரசன் (வடக்கு), மோகன்ராஜ் (தெற்கு) உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஜி.கே.வாசனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு, ஏர் கலப்பை, சூலாயுதம் ஆகியவை வழங்கப்பட்டன.


Next Story