போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

சேலம் மாநகர போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சேலம்

சேலம் மாநகர போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம்

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. சேலம் மாநகர போலீசார் சார்பில் சாராயம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சூரமங்கலத்தில் நேற்று நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

தவிர்க்க வேண்டும்

போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி பேசுகையில், போதை பொருட்களை கடத்துவதோ, வைத்திருப்பதோ, விற்பதோ சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் உண்டு. எனவே, சாராயம் மற்றும் போதை பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், ஜெயவேல், சுப்புலட்சுமி, செல்வி உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

ஆட்டோக்கள் ஊர்வலம்

இதேபோல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஆட்டோக்கள் ஊர்வலத்தை போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஆட்டோ டிரைவர்களுடன் ஊர்வலமாக பழைய பஸ் நிலையம் வரை நடந்து சென்றார். இந்த ஊர்வலத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஊர்வலமாக சென்றன. அப்போது, சாராயம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

முன்னதாக துணை கமிஷனர் லாவண்யா பேசுகையில், ஆட்டோ டிரைவர்களுக்கு சமூக பொறுப்பு நிச்சயம் இருக்க வேண்டும். ஏதாவது குற்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களிடம் நெருங்கி பேசும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே, போதை பொருட்களுக்கு நீங்கள் அடிமையாகிவிடக்கூடாது. இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாஷ், சந்திரகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story