கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநாடு


கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநாடு
x

அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூர்

மாவட்ட மாநாடு

கரூரில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க 9-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாண்டி கண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் விஜய மனோகரன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், பட்டம் பெற்ற இளநிலை உதவியாளர்கள், நேரடி நியமன உதவியாளர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க வேண்டும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் நேர்முக உதவியாளர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும்,

காலமுறை ஊதியம் வேண்டும்

தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு பணி மாறுதலில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும், மாவட்டங்களில் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார வளமையங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அலுவலக பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அமைச்சு பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தேர்வு பணிகளில் ஆய்வக உதவியாளர்களை, அலுவலக உதவியாளர்களாகவும் அடிப்படை பணியாளர்களாகவும் பணி அமர்த்துவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணை தலைவர் லட்சுமணன், மாவட்ட இணை செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து ெகாண்டனர்.


Next Story