இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையவில்லை-ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகள் பேட்டி
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகமாக இருந்து வருகின்றது. ஒரு கிலோ அரிசி ரூ.200-க்கும், தக்காளி ரூ.380-க்கும் விற்பனை செய்யப்படுவதாக பாம்பன் வந்த இலங்கை சுற்றுலா பயணிகள் பேட்டி அளித்தனர்.
ராமேசுவரம்,
இலங்கை சுற்றுலா பயணிகள்
இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் விமானம் மூலம் தமிழகம் வந்த இலங்கை சுற்றுலா பயணிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். அவர்கள் நேற்று பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி கடலுக்குள் அமைந்துள்ள ரெயில் மற்றும் ரோடு பாலத்தையும் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தையும் பார்த்து ரசித்தனர்.
இதை தொடர்ந்து ராமேசுவரம் வந்த அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததுடன் தனுஷ்கோடிக்கும் சென்று பார்த்து ரசித்தனர்.
அப்போது இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த உருத்ர மூர்த்தி, யுகநாதன் தம்பதியினர் கூறியதாவது:-
விலைவாசி குறையவில்லை
கொரோனாவுக்கு பிறகு இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டன. தற்போது வரை பொருட்களின் விலை குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு கிலோ அரிசி ரூ.200-க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.340-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.325-க்கும், தக்காளி ஒரு கிலோ ரூ.380-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதுபோல் அனைத்து விதமான காய்கறிகள், உணவு பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை. இலங்கையில் நிலைமை இன்னும் சரியாகவில்லை.
ஏற்கனவே இருந்த அரசை விட தற்போது உள்ள அரசு ஓரளவு பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றது. இலங்கையில் வேலை வாய்ப்புகள், தொழில் நிலைமை சரியாக இல்லை. வேலை வாய்ப்புகள் இல்லாததால் தான் அங்கு மக்கள் நிம்மதியாக வாழ முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்தியா உதவி
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனோ அவரது குடும்பத்தினரோ யாரும் உயிருடன் இல்லை. உயிரோடு இருப்பதற்கான எந்த சான்றும் எங்களுக்கு தெரிந்தவரை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இலங்கைக்கு தேவையான பல்வேறு உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்து வருகின்றது. இந்தியா செய்து வரும் உதவியும் இலங்கையில் உள்ள பொருளாதார நிலைமை சரியாவதற்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.