மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் போடி வரை நீட்டிப்பு


மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் போடி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2023 1:44 AM IST (Updated: 3 Jun 2023 9:51 AM IST)
t-max-icont-min-icon

மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அத்துடன், சென்னை சென்டிரல்-மதுரை வாரம் மும்முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் போடி வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

மதுரை

மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அத்துடன், சென்னை சென்டிரல்-மதுரை வாரம் மும்முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் போடி வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

மதுரை-போடி

மதுரையில் இருந்து போடி வரையிலான அகலப்பாதை பணிகள் நடந்து வந்தது. இதில், மதுரை-தேனி அகலப்பாதை பணிகள் முடிந்தவுடன் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், தேனி-போடி இடையேயான அகலப்பாதை பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து, மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் போடி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதற்காக அந்த ரெயில் வந்து செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை-போடி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06701) மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும். வடபழஞ்சியில் இருந்து 8.35 மணிக்கும், உசிலம்பட்டியில் இருந்து 9.05 மணிக்கும், ஆண்டிப்பட்டியில் இருந்து 9.25 மணிக்கும், தேனியில் இருந்து 9.44 மணிக்கும் புறப்பட்டு போடி ரெயில் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் போடி-மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06702) போடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும். ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும்.

சென்னை சென்டிரல்-போடி

இந்த நிலையில், மதுரை-போடி ரெயில் சென்னை வரை நீட்டிப்பு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. அதாவது, மதுரை-சென்னை சென்டிரல் வாரம் மும்முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் போடி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ரெயில் சேவை தொடங்குவது திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, வருகிற 16-ந் தேதி முதல் சென்னை சென்டிரல்-போடி ரெயில் சேவை தொடங்க உள்ளது.

அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.20601) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு வழக்கம் போல புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மதுரையில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு உசிலம்பட்டிக்கும், 8.20 மணிக்கு ஆண்டிப்பட்டிக்கும் சென்றடைகிறது. தேனி ரெயில் நிலையத்தில் இருந்து 8.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு போடி ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், வருகிற 18-ந் தேதி முதல் போடியில் இருந்து மதுரை வழியாக சென்னை சென்டிரலுக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.20602) போடியில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தேனிக்கு 8.50 மணிக்கு வந்தடைகிறது. ஆண்டிப்பட்டியில் இருந்து இரவு 9.10 மணிக்கும், உசிலம்பட்டியில் இருந்து இரவு 9.30 மணிக்கும் புறப்படுகிறது.

மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது.


Related Tags :
Next Story