போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் சாலை மறியல்


போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:45 PM GMT)

போராட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு பஸ்சில் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்:

தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரில் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் வேன், பஸ்களில் சென்னைக்கு புறப்பட்டனர்.

அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 55 பேர், கரும்பு விவசாயி சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஒரு பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர். திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ஒலக்கூர் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். பஸ் டிரைவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாங்கள் கொண்டு வந்திருந்த கரும்பு மற்றும் நிலக்கடலையை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயிகளுடன் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள், முறையாக அனுமதி பெற்றுதான் போராட்டத்தை அறிவித்துள்ளோம். எங்களை தடுத்து நிறுத்துவது ஏன் என்று கேட்டனர். இதையடுத்து போலீசார், விவசாயிகளை அதே பஸ்சில் ஏற்றி மீண்டும் செஞ்சிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story