சுள்ளான் ஆற்றில் ஆகாயத்தாமரைசெடிகளை அகற்ற வேண்டும் - விவசாயிகள்
வேம்பகுடி அருகே சுள்ளான் ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேம்பகுடி அருகே சுள்ளான் ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுள்ளான் ஆறு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தின் முக்கிய பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள், ஆறுகளில் சுள்ளான் ஆறும் ஒன்றாகும். சுள்ளான் ஆறு மூலம் பாபநாசம் மற்றும் வலங்கைமான், வட்டத்தில் 1936 எக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாபநாசம் தாலுகாவில் மட்டும் வேம்பகுடி, புரசக்குடி, அகரமாங்குடி, சோலைபூஞ்சேரி, பொன்மான்மேய்ந்தநல்லூர், மட்டையான்திடல், மேலசெம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் மற்றும் வடிகால் வசதிபெறுகின்றன.
ஆகாயத்தாமரை
சுள்ளான் ஆற்றில் சந்திராபடி கிராமம் முதல், வேம்பகுடி கிராமம் வரையில் ஆற்றின் பெரும் பகுதியை ஆகாயத்தாமரை செடிகளும், புதர்களும் ஆக்கிரமித்துள்ளன. ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லவும், மழை காலங்களில் தண்ணீர் வடிய வைக்கவும் சிரமம் ஏற்படுகிறது.
அதனால் விவசாய நிலங்கள் சரியான பாசனவசதி மற்றும் வடிகால் வசதி பெறமுடியாமல் கடந்த ஆண்டு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விளைநிலங்களில் மழைநீர்புகுந்து விவசாயிகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.
விவசாயிகள் கோரிக்கை
நடப்பு ஆண்டு மழைகாலம் தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுள்ளான் ஆற்றில் சந்திரபாடி, புரசக்குடி, வேம்பகுடி உள்பட முக்கிய வடிகால் பகுதிகளில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.