விடுபட்டவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை- விவசாயிகள்
விடுபட்டவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விடுபட்டவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கடந்த 2020-21-ம் ஆண்டு பயிர்க்காப்பீட்டு தொகையை விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் விரைந்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி உரம், யூரியா உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
அறிவிப்பு பலகை
அறுவடை எந்திரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் கூடுதல் தொகை கேட்டாலோ அல்லது இடுபொருட்கள் வாங்க வற்புறுத்தினாலோ விவசாயிகள் புகார் தெரிவிக்க வசதியாக கூட்டுறவு வங்கி மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம், வேளாண்மைதுறை இணை இயக்குனர் ஆசிர் கனகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை துணை இயக்குனர் ரவீந்திரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.