நெல்கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வுமழை காலங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்


நெல்கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வுமழை காலங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழை காலங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழை காலங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

சம்பா, தாளடி அறுவடை

தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின. பல இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டதால் சாய்ந்த நெற்பயிர்கள் அழுகின. மேலும் உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

நெல்கொள்முதலில் ஈரப்பதத்தை தளர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இந்திய உணவுக்கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், போயோ, சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் அருள்மொழிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து ஒரத்தநாடு தாலுகா பொய்யுண்டார்குடிக்காடு, பாப்பாநாடு கொள்முதல் நிலையங்களிலும், அதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை தாலுகா அலிவலம், பில்லாங்குழி ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு செய்தனர்.

அப்போது கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டு இருந்த நெல்லின் மாதிரிகளை எடுத்து வந்து தாங்கள் கொண்டு வந்த எந்திரத்தின் மூலம் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த விவசாயிகளிடம் எப்போது அறுவடை செய்யப்பட்டது, என்ன ரகம், எத்தனை நாளாக கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கிறீர்கள், பெயர், முகவரி ஆகியவற்றை கேட்டு ஆய்வு செய்தமைக்கான ஒப்புதலையும் பெற்றுக் கொண்டனர்.

22 சதவீதம் ஈரப்பதம்

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களில் இருந்தும், 3 மாதிரிகளை கவர்களில் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். அப்போது விவசாயிகள் மழை காலங்களில்நெல்கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story