50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு- விவசாயிகள்


50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு- விவசாயிகள்
x

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இயற்கை இடர்பாடுகள்

தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்கிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகமும் நெல் விளையும் தஞ்சை மண்ணில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் உழைப்பில் விளைந்த நெல் மணிகள், இயற்கை பேரிடர்களால் சேதம் அடைந்து, நஷ்டம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல் நிலையங்கள் முன்பு விவசாயிகள் நெல்லுடன் பல நாட்கள் இரவு, பகலாக காத்திருப்பதும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் திறந்த வெளியில் மழையில் நனைந்து வீணாவதும் தொடர்ந்து நடக்கிறது.

இழப்பீடு

விளைவித்த நெல்லை பாதுகாக்க விவசாயிகள் படாதபாடு படுகிறார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் தேக்கம் அடைந்துள்ளது.

பருவம் தவறி பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் அபாயம் நீடிக்கிறது. வெயில் காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைப்பதால் ஏற்படும் எடை குறைவால் நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கும், அரசுக்கும் இழப்பு ஏற்படுவதோடு, கொள்முதல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அதற்கான இழப்பீட்டு தொகையை செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

சேமிப்பு கிடங்கு

கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நெல்லை முறைப்படி சேமிக்கும் வகையில் அனைத்து தாலுகாவிலும் 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story