கிடங்கு வசதியுடன் வெல்லம் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- விவசாயிகள்


கிடங்கு வசதியுடன் வெல்லம் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- விவசாயிகள்
x

அய்யம்பேட்டை பகுதியில் கிடங்கு வசதியுடன் கூடிய வெல்லம் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை பகுதியில் கிடங்கு வசதியுடன் கூடிய வெல்லம் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

வெல்லம் தயாரிக்கும் பணி

அய்யம்பேட்டை சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பிலிருந்து பல ஆண்டு காலமாக வெல்லம் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கரும்பு சாறில் இருந்து தயாராகும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவை உடலுக்கு உறுதியை தரும் உணவுப்பொருளாக பயன்படுகிறது. நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரம் தொடங்கி மார்ச் மாதம் முடிய வெல்லம் தயாரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பொங்கல் சமயத்தில் வெல்லத்திற்கு நல்ல கிராக்கி ஏற்படும் என்பதால் இரவு, பகலாக வெல்லம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவர்.

புவிசார் குறியீடு

தஞ்சை மாவட்டத்தில் அய்யம்பேட்டையை சுற்றியுள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதிஅக்ரஹாரம், மாகாளிபுரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சு வெல்லம் தயார் செய்யப்படுகிறது. இப்பகுதி வெல்லத்தின் தனி சிறப்பினை நன்கு அறிந்த தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் வீர மாங்குடி வெல்லத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ள நிலையில் இப்பகுதி கரும்பு விவசாயத்தை மேலும் மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இங்கு தயாரிக்கும் வெல்லம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு கூடுதல் வாகன செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே அய்யம்பேட்டை பகுதியிலேயே கிடங்கு வசதியுடன் கூடிய வெல்லம் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாறு எடுத்து வெல்லம் தயார்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,

வீரமாங்குடி பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு புவிசார் குறியீடு பெற இருப்பதாக அறிவித்திருப்பது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அச்சுவெல்லம் தயாரிப்பதற்காக சி.ஓ-32,1110 ஆகிய ரக கரும்புகளை சாகுபடி செய்துள்ளோம். இந்த கரும்பினை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து அறுவடை செய்யத் தொடங்குவோம். ஒரு ஏக்கர் கரும்பில் இருந்து சுமார் 160 சிப்பம் (ஒரு சிப்பம்-30கிலோ) வெல்லம் தயாரிக்கலாம்.

1,500 கிலோ வரை அச்சுெவல்லம்

அச்சு வெல்லத்திற்கு நல்ல சுவையை பக்குவம் தான் நிர்ணயிக்கிறது. மற்ற மாவட்டங்களில் தயாராகும் அச்சு வெல்லத்தை விட இங்கு தயாராகும் அச்சு வெல்லம் சுவை நன்றாக இருக்கும். அதனால் தான் அனைவரும் இங்கு தாயாராகும் அச்சு வெல்லத்தை விரும்புகின்றனர். ஒரு நாளில் 500 முதல் 1500 கிலோ வரை அச்சுவெல்லம் தயாரிக்கலாம். அச்சுவெல்லத்தின் நிறத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உரவிலை, டீசல்விலை, அச்சு வெல்லம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை, கூலியாட்கள் சம்பளம் இவைகள் கடந்த காலங்களில் பல மடங்கு உயர்ந்து விட்ட நிலையிலும், ஆண்டாண்டு காலமாக வெல்லம் தயார் செய்து செய்து வருகின்றோம்.

வெல்லம் கொள்முதல் நிலையம்

இங்கு தயாராகும் வெல்லம் கரூர், பழனி, மதுரை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம். இதனால் கூடுதல் வாகன செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. அதே போல மழை போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் வெல்லத்தை சேமித்து வைக்க விவசாயிகளிடம் போதிய இட வசதி இல்லை. எனவே இப்பகுதி கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அய்யம்பேட்டை பகுதியில் கிடங்கு வசதியுடன் கூடிய வெல்லம் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும். மேலும் இப்பகுதிக்கென தனியாக கரும்பு அலுவலரை நியமித்து அவ்வப்போது விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றனர்.


Next Story