வடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை


வடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
x

தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் வடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

தென்னை சாகுபடி

வடகாடு, மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், கீரமங்கலம், குளமங்கலம், சேந்தன்குடி, பனங்குளம், மேற்பனைக்காடு, மறமடக்கி, கொத்தமங்கலம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடி செய்து வருகிறார்கள். இங்கு உற்பத்தியாகும், தேங்காய்கள் சில்லறை வணிகம் போக, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி, குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளில் ஏலம் முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கிருந்து வியாபாரிகள் மூலமாக, தேங்காய்கள் ஏலம் எடுக்கப்பட்டு உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேங்காய் மொத்த வியாபாரிகள் நேரடியாக தென்னை விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று தேங்காய்களை மொத்தமாக வாங்கி திருச்சி, சென்னை, காங்கேயம், மும்பை, புதுடெல்லி போன்ற பெரு நகரங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி

தற்போது வெளிமாவட்ட தேங்காய்களின் வரத்து அதிகரித்து உள்ளதால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு தேங்காய் ரூ.8 முதல் ரூ.9-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.50 முதல் ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

எனவே தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வடகாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

கஜாபுயல்

சுரேஷ்:- பிள்ளையை பெற்றால் கண்ணீர். தென்னையை வைத்தால் இளநீர் என்பது பழமொழி. பிள்ளைகள் கூட பெற்றோரை கைவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தென்னை வைத்தவர்களை தென்னை மரங்கள் என்றைக்கும் கைவிடாது. ஆனால் தற்போது தென்னையை நட்டாலும் கண்ணீர் தான் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். கஜா புயலில் இருந்தே அடுத்தடுத்து தென்னை விவசாயிகள் பல்வேறு வகையான பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். எனவே இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

குறைந்த விலைக்கு கொள்முதல்

விஜயகுமார்:- தேங்காய், காய்கறிகள், பயறு வகைகள் உள்ளிட்ட விளை பொருட்கள் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் மிகக்குறைந்த விலையிலேயே கொள்முதல் செய்து வருகிறார்கள். ஆனால் இடையில் விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் தேங்காய் கீற்று ஒன்று ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு தேங்காய் ஒன்று ரூ.8-க்கு கொள்முதல் செய்யப்படுவது வேதனைக்குரியதாகும். எனவே விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். மேலும், இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

கொள்முதல் நிலையம்

கீழாத்தூர் தமிழரசன்:- தென்னையில் எதையும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அனைத்தும் பயனுள்ளவை. தேங்காய்களில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய், தேங்காய் நார் கழிவு மூலம் கயிறு உற்பத்தி, தேங்காய் கொட்டாச்சி மூலமாக கார்பன் உற்பத்தி இப்படி எண்ணற்ற பலன்கள் கிடைத்து வரும் நிலையில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி கண்டு இருப்பது வேதனை அளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி பகுதியில் ஒழுங்கு முறை கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் மூலமாக இப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய விவசாயிகள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தென்னை விவசாயிகள் இருப்பதால் இங்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

தேங்காய் பருப்பு எடை அதிகம்

தேங்காய் வியாபாரி இளங்கோவன்:- தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவிலான தேங்காய்கள் திருச்சி மாவட்டத்திற்கு வந்து அங்கிருந்து பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் தேங்காய்களில் பருப்புகளின் எடை அதிகளவில் இருப்பதால் பிற வியாபாரிகள் மூலமாக, விரும்பி வாங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் தேங்காய்கள் பெரும்பாலும் காங்கேயம் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. டன் ஒன்று ரூ.28 ஆயிரம் வரை விற்பனை இருந்து வந்த நிலையில், தற்போது டன் ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story