தி.மு.க. ஆட்சியில் அச்சமின்றி நடமாடும் ரவுடிகள்; பழனி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு


தி.மு.க. ஆட்சியில் அச்சமின்றி நடமாடும் ரவுடிகள்; பழனி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
x

தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் அச்சமின்றி நடமாடுவதாக பழனி பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

திண்டுக்கல்

தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் அச்சமின்றி நடமாடுவதாக பழனி பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

பொதுக்கூட்டம்

பழனி அருகே புஷ்பத்தூரில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து முதல்-அமைச்சரிடம் கேட்கக்கூடாது என்றும், வாக்குறுதியை எழுதிய டி.ஆர்.பாலுவிடம்தான் கேட்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அப்படி என்றால் டி.ஆர்.பாலுவை முதல்-அமைச்சர் ஆக்குங்கள். அதை பா.ஜ.க. வரவேற்கும். தமிழகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. திருவாரூர் சென்ற முதல்-அமைச்சர் வயல்வெளியில் சிவப்பு கம்பளம் விரித்து கஞ்சி போட்ட வெள்ளை சட்டை, வேட்டி கட்டி விவசாயம் செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஒரு ஆண்டு ஆட்சி காலத்தில் அதிக பொய் பேசி சாதனை படைத்தவர் முதல்-அமைச்சர் ஸ்டாலின். அமைச்சர்களின் ஊழல் குறித்து அறிவிக்க போவதாக பேசிய உடன் 4 அமைச்சர்கள், எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, கோபாலபுரம் தெரிவித்ததால் மட்டுமே கையெழுத்து போட்டதாக கூறுகின்றனர்.

ரவுடிகள் நடமாட்டம்

தி.மு.க.வின் கோட்டை என பெருமை பேசும் சென்னையில் 50 ஆயிரம் பேர் திரண்டு பிரதமருக்கு வரவேற்பு கொடுத்ததை ஏற்கமுடியாததே முதல்-அமைச்சரின் இதுபோன்ற பேச்சுக்கு காரணம். தி.மு.க. ஆட்சியில் தற்போது தமிழகத்தில் ரவுடிகள் தைரியமாக நடமாடி வருவதுடன், அச்சமின்றி கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து தள்ளுவது நடிகர் வடிவேலு சினிமா படமான 23-ம் புலிகேசியை பார்ப்பது போல் உள்ளது. மகன், மருமகனை தொடர்ந்து 3-வதாக மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் புதிய பவர் சென்டராக உருவாகியுள்ளார். அதனால் தமிழகத்தில் யார் முதல்-அமைச்சர் என கேள்வி எழுகிறது.

காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் இணைந்து கச்சத்தீவை தாரைவார்த்ததுடன், மீன்பிடி உரிமையை ரத்து செய்தனர். தற்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மோடியிடம முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. பணம் முழுவதும் மத்திய அரசு கொடுத்துவிட்ட நிலையில் இப்போது மாநில அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பார்களா?.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக புஷ்பத்தூர் ஊராட்சி தலைவர் செல்வராணி மகுடீஸ்வரன் தலைமையில் 3 ஆயிரம் பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆனந்த், மாவட்ட நிர்வாகி கமலேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story