மீனவர் குறைதீர் கூட்டங்களை தவறாது நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மீனவர் குறைதீர் கூட்டங்களை தவறாது நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"தமிழகத்தில் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களது குறைகளைக் கேட்டறியவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள போதிலும், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இக்கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை.
இதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் காதில் பூ சுற்றியும், சங்கு ஊதியும் போராட்டம் நடத்தியுள்ளனர். மிகவும் ஆபத்தான சூழலில், பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் ஆழ்கடலில் மீன்பிடித்து வந்து, குறைந்த வருவாயில் வாழ்க்கை நடத்தும் மீனவர் நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
எனவே, கூட்டம் நடத்தப்படவேண்டிய மாவட்டங்களில், மாதந்தோறும் மீனவர் குறைதீர் கூட்டங்களை நடத்துவதுடன், ஏற்கெனவே நடத்தப்பட்ட கூட்டங்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசும் கவனம் செலுத்தி, கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர் நலன்களைப் பேண வேண்டுமென்று மநீம வலியுறுத்துகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.