குறைந்த அளவே கிடைக்கும் மீன்கள்; ஏமாற்றத்துடன் கரை திரும்பும் மீனவர்கள்


குறைந்த அளவே கிடைக்கும் மீன்கள்; ஏமாற்றத்துடன் கரை திரும்பும் மீனவர்கள்
x

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்புகிறார்கள். வலையில் அளவுக்கு அதிகமாக பாசிகள் சிக்குவதும் மீனவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்புகிறார்கள். வலையில் அளவுக்கு அதிகமாக பாசிகள் சிக்குவதும் மீனவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மீன் வளம் குறைந்தது

தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதியாக அதிராம்பட்டினம் விளங்குகிறது. அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரைதெரு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய கடற்கரை கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் தினசரி கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

கடலில் மீன்வளம் குறைந்து விட்ட நிலையில் தங்கள் வலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்குவதில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். மீன்கள் சிக்குவது குறைந்ததால், மீனவர்கள் பலர் பெரும்பாலான நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் சூழல் உள்ளது.

வலையில் சிக்கும் பாசி

இந்த நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது வலையில் மீன்களை விட கடல் பாசிகளே அதிகமாக சிக்குகின்றன. மீன்கள் குறைந்த அளவே கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் மேலும் கவலை அடைந்து ஏமாற்றத்துடன் கரை திரும்ப வேண்டிய நிலை உள்ளது. அதிராம்பட்டினம் கடற்கரையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை கடலில் மணல் திட்டுகள் உள்ளது. இந்த மணல் திட்டுகளில் கடல் பாசிகள் படர்ந்து வளர்கிறது. கடல் பாசிகள் இறால் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கும். அதனால் இறால் வகை இனங்கள் இந்த பகுதியில் கூட்டமாக இருக்கும். காற்று, மழையின் தாக்கம் இருக்கும் காலங்களில் கடலுக்கு அடியில் நீரோட்டம் மாறுபட்டு, கடல் பாசிகள் இடம் பெயர்கின்றன. நேற்று முன்தினம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மழை பெய்தது. இதனால் கடல் பாசிகள் இடம் மாறி, மீனவர்களின் வலையில் சிக்கி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வலையை இழுப்பதில் சிரமம்

கடல் பாசிகள் வலையின் முகத்துவார பகுதிகளை அடைத்துக் கொள்கின்றன. தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த பாசிகள் வலையில் சிக்கி கொள்வதால் மீனவர்களுக்கு வலையை இழுப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மீன்கள் பிடிபடுவதும் குறைந்து, மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பி வருகிறார்கள்.

இதுகுறித்து மீனவர் சஞ்சீவிகுமார் கூறுகையில், 'அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மீன் வரத்து குறைவாக உள்ளது. நேற்று முன்தினம் காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று கடலுக்கு அடியில் நீரோட்டத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மணலில் படர்ந்திருந்த கடல் பாசிகள் வலையில் சிக்கி கொண்டன.

நேற்று அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச்சென்ற நாங்கள் காலை 11 மணிக்கு கரை திரும்பினோம். மீன்கள் குறைந்த அளவே அகப்பட்டுள்ளன. டீசல் செலவுக்கு கூட வருமானம் இல்லாமல் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது' என்றார்.


Next Story