டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்


டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்
x

பெரம்பலூரில் வெளிநபர் மூலம் மது விற்பனை செய்தது தொடர்பாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்,

முதுநிலை மண்டல மேலாளர் ஆய்வு

பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 90 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மேலும் இந்த கடைகளில் சராசரியாக மாதம் ரூ.2 கோடி முதல் ரூ.2½ கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதால், இங்கு ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 4 விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதி தலைமையிலான குழுவினர் கடந்த 12-ந்தேதி மாலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வெளிநபர் மூலம் மது விற்பனை

அப்போது அந்த டாஸ்மாக் கடையில் வெளிநபரான பெரம்பலூர் சங்குபேட்டையை சேர்ந்த பிரபு (வயது 37) என்பவர் மதுபானங்களை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்த மேற்பார்வையாளர் அரியலூரை சேர்ந்த அய்யன்துரை (46) மற்றும் விற்பனையாளர்களான அத்தியூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் (44), மங்களமேட்டை சேர்ந்த சாதிக் பாஷா (43), மேலப்புலியூரை சேர்ந்த முனீஸ்வரன் (46), விளாமுத்தூரை சேர்ந்த சூர்யபிரகாஷ் (40) ஆகியோர் பணியில் இல்லாமல், வெளிநபரை கடையில் மதுபானங்களை விற்பனை செய்ய கூறிவிட்டு, வெளியே சென்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதி, பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செல்வராஜூடம் மேற்கண்ட 5 பேரும் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார்.

5 பேர் பணியிடை நீக்கம்

அதன்பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செல்வராஜ் பெரம்பலூர் புதிய பஸ் நிலைய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் அய்யன்துரை, விற்பனையாளர்கள் பாலசுப்ரமணியன், சாதிக் பாஷா, முனீஸ்வரன், சூர்யபிரகாஷ் ஆகிய 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் டாஸ்மாக் கடை ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story