குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்
x

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் இந்த மழை ஓரிரு இடங்களில் கனமழையாகவும் மற்ற இடங்களில் சாரல்மழையாகவும் பெய்து வருகிறது. தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முழுவதும் சாரல் மழையாக தூறிக் கொண்டே இருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று இரவு முதல் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவி மற்றும் புலி அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். மெயின் அருவியில் சிறுசிறு கற்களும் வந்து விழுந்தன. மெயின் அருவியில் குளிக்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வெள்ளப்பெருக்கு குறைந்ததும் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story