தமிழக போலீசார் அனைவருக்கும் அரசு பதக்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தமிழக போலீசார் அனைவருக்கும் அரசு பதக்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

ஜனாதிபதி கொடி கிடைத்தது வரலாற்றுமிகு பெருமை என்றும், தமிழக போலீசார் அனைவருக்கும் அரசு பதக்கம் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக போலீஸ் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே கிடைத்திருக்கக்கூடிய வரலாற்றுமிகு பெருமை இது.

தமிழ்நாடு போலீஸ் துறையின் குறிப்பிட்ட ஒரு சாதனைக்கு கிடைத்த விருது அல்ல, தமிழ்நாடு போலீஸ் துறை 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்கு கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம். இரவு-பகல், வெயில்-மழை பாராது, ஏன், தன் உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல் ஆற்றிய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். கருணாநிதி 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி ஜனாதிபதி கொடியை தமிழக போலீஸ் துறைக்கு பெற்று தந்தார்.

போலீஸ் நிலைய மரணங்கள்

கடந்த ஓராண்டு காலமாக போலீஸ் துறையின் செயல்பாடு முன்பைவிட மிக அதிகளவில் பாராட்டும்படியாக உள்ளது. போலீஸ் நிலைய மரணங்கள் குறைந்துள்ளன. போலீஸ் நிலைய மரணம் 2018-ம் ஆண்டு 17 என்று பதிவானது, 2021-ம் ஆண்டு 4 மரணங்களாக குறைந்துள்ளது. போலீஸ் நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தி தாருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். சிறு குற்றம் நடந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட கூடாது. பாலியல், போக்சோ சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்கியாக வேண்டும்.

எத்தனை வழக்குகள் பதிவு?

கடந்த ஆண்டுக்கான புள்ளிவிவரங்களை வாங்கி பார்த்தேன். 2021-ம் ஆண்டு மட்டும் சுமார் 12 லட்சம் பேர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்கள். 7 லட்சத்து 56 ஆயிரத்து 753 குற்ற வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. இவற்றில் தொடர்புடைய 9 லட்சத்து 27 ஆயிரத்து 763 பேரை போலீஸ் துறை கைது செய்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி உள்ளது.

7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் போலீஸ் நிலையங்களில் விசாரிக்கப்பட்டு முடிவு காணப் பட்டுள்ளது. இந்த மனுக்களில் 75 ஆயிரம் மனுக்கள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பெறப்பட்டவை. இத்தனை பேர் போலீஸ் நிலையங்களை நாடி செல்கிறார்கள் என்று சொன்னால், மக்கள் போலீஸ் துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், நன்மதிப்பும் காரணம் என்று நமக்கு தெளிவாகிறது.

தமிழக அரசு பதக்கம்

போலீசாரின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காகத்தான் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பல நலத்திட்டங்களை நிறைவேற்றி தருவோம் என உறுதியளிக்கிறேன்.

ஜனாதிபதியின் விருது பெற்றிருக்கும் தமிழக போலீஸ் துறையினர் தங்கள் காக்கிச்சட்டையில் அதன் அடையாளமான கொடியினை அணிந்து செல்வார்கள். 'நிஸான்' என்றழைக்கப்படும் இந்த சின்னம் உங்களுக்கு பெருமை சேர்க்கும்.

தமிழ்நாடு போலீஸ் துறை தொடங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நிலையில், ஜனாதிபதியின் வண்ணக்கொடி பெறும் நிகழ்வை முன்னிட்டு போலீஸ் டி.ஜி.பி. முதல் போலீசார் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு போலீஸ் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story