மத்திய அரசின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு


மத்திய அரசின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
x

மத்திய அரசு அறிவித்த சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்ற தமிழக உயர்கல்வி நிறுவனங்களை கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி, கவுரவித்தார்.

சென்னை:

'தமிழ்நாட்டின் உயர்கல்வி சிறப்பு' என்ற பெயரில் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தமிழக உயர்கல்வி நிறுவனங்களை பாராட்டி, அந்த நிறுவனங்களின் இயக்குனர்கள், துணைவேந்தர்கள், பிரதிநிதிகளை அழைத்து கவர்னர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி பாராட்டி கவுரவித்தார்.

பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் வந்திருப்பு மிகப்பெரிய சாதனை. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 20 இடங்களுக்குள் தமிழக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த கல்வி நிறுவனங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இதன் மூலம் தமிழ்நாட்டின் பெயரை வெளியில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது. தரவரிசையில் இடம்பிடித்த, இடம்பிடிக்காத கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். மேலும் தங்களுடைய தரத்தை மேம்படுத்த வேண்டும். தரவரிசையில் முதலிடம் பிடித்ததை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். சென்னை ஐ.ஐ.டி. மிகச்சிறப்பாக செயல்பட்டு சர்வதேச அளவில் சிறந்த அடையாளம், பெருமையை பெற்றிருக்கிறது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி கல்வியில் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுவதோடு, சிறந்த கருத்துரு, யோசனைகளை பரிமாறி கொள்ள வேண்டும். இதன்மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெறமுடியும்.

தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பல நல்ல விஷயங்கள் மேலோங்கி இருக்கின்றன. அதனை பின்பற்றலாம். தனியாருடன் இணைந்து செயல்பட அரசு முன்வரவேண்டும்.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசும்போது,

'உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை சதவீதத்தில் தமிழகம்தான் அதிகளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எண்ணிக்கையில் மட்டும் போதுமா? உயர்கல்வியின் தரத்திலும் தமிழகம்தான் முதலிடம். அதை இன்னும் உயர்த்தவேண்டும் என்ற முயற்சியில்தான் இந்த பாராட்டு நிகழ்ச்சி நடக்கிறது' என்றார்.


Next Story