கன்டெய்னர் லாரியில் இருந்து இறக்கிய ரூ.27 லட்சம் குட்கா பறிமுதல்
குருபரப்பள்ளி அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைப்பதற்காக கன்டெய்னர் லாரியில் இருந்து இறக்கிய ரூ.27 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 15 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைப்பதற்காக கன்டெய்னர் லாரியில் இருந்து இறக்கிய ரூ.27 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 15 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குட்கா கடத்தல்
கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழ்நாட்டிற்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா-ஆந்திர எல்லையோரம் உள்ள நடு சாலை அருகே மேல் கொண்டப்ப நாயக்கனப்பள்ளி கிராமத்தில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் குட்கா பதுக்கி வைத்துள்ளதாக குருபரப்பள்ளி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
பறிமுதல் -டிரைவர் கைது
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையில் போலீசார் விரைந்து சென்று கோழிப்பண்ணையில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த கன்டெய்னர் லாரி ஒன்றில் 100 மூட்டைகளில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 4 டன் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவற்றை சிலர் பதுக்கி வைப்பதற்காக இறக்கி கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 4 டன் குட்கா மற்றும் கன்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக லாரி டிரைவரான கிருஷ்ணகிரி ராஜு நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 15 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.