கரூர் மாவட்டத்தில் கன மழை


கரூர் மாவட்டத்தில் கன மழை
x

கரூர் மாவட்டத்தில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

கனமழை

கரூர் நகரப்பகுதியில் பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து கருமேகமாகக் காட்சியளித்தது. தொடர்ந்து இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.பணி முடிந்து வீட்டிற்கு சென்றோர் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குளித்தலை

குளித்தலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று பகல் நேரங்களில் அவ்வப்போது வெயில் அடித்து வந்தாலும் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு லேசான சாரலுடன் தொடங்கிய மழை சற்று மிதமாக பெய்ய தொடங்கியது.‌ இந்த மலை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் தெரு மற்றும் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

நச்சலூர்

நச்சலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு நெய்தலூர் காலனி, நெய்தலூர், சேப்ளாப்பட்டி ஆகிய பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், புன்னம்சத்திரம், தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் கிராமப்புறங்களில் பயிரிடப்பட்டுள்ள பணப்பயிர்கள் செழித்து வளரும் நிலை ஏற்பட்டது.

மழையளவு

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கரூர்-2, அரவக்குறிச்சி-34, அணைப்பாளையம்-29, க.பரமத்தி-7.8, குளித்தலை-18, தோகைமலை-2, கிருஷ்ணராயபுரம்-5.6, மாயனூர்-25, பஞ்சப்பட்டி-18.4, கடவூர்-22, பாலவிடுதி -9.1, மைலம்பட்டி-4. மொத்தம்-176.90.


Next Story