இந்து மகாசபா சார்பில் சொத்தவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக சென்றன


இந்து மகாசபா சார்பில் சொத்தவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக சென்றன
x

இந்து மகாசபா சார்பில் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டு சொத்தவிளைக்கு சென்றடைந்தன. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இந்து மகாசபா சார்பில் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டு சொத்தவிளைக்கு சென்றடைந்தன. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை பிரதிஷ்டை

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி குமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டன. இதுபோக வீடுகள் மற்றும் கோவில்களிலும் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்த சிலைகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் முதல் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது.

ஊர்வலம்-கரைப்பு

முதல் நாளில் சிவசேனா சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

நேற்று 2-வது நாளாக இந்து மகா சபா சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மதியம் வாகனங்கள் மூலம் நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகர தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஊர்வலம் சாலை வழியாக புறப்பட்டது. ஊர்வலத்தின் போது பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்டன. மேலும் வாகனத்தில் இருந்தபடியும், வாகனத்தின் முன்பும் சிறுவா்கள், வாலிபர்கள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சொத்தவிளை கடற்கரையை சென்றடைந்ததும் அங்கு சிலைகளை கரைப்பதற்காக வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் ஒவ்வொரு சிலையாக கடலில் கரைக்கப்பட்டன.

பலத்த பாதுகாப்பு

முன்னதாக அண்ணா பஸ்நிலையம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் வந்த போது பாட்டுக்கு ஏற்ப சில மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர். அந்த காட்சியை அங்கு நின்றவர்கள் ஆர்வமுடன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததை காண முடிந்தது.

விநாயகர் சிலை ஊர்வலம், கரைப்பின் போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

---


Next Story