ரெயில்களில் மதுபானங்கள் கடத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்


ரெயில்களில் மதுபானங்கள் கடத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்களில் மதுபானங்கள் கடத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்

விழுப்புரம்

விழுப்புரம்

போலீசார் சோதனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதியன்று மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்த 14 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ரெயில்கள் மூலம் எளிதாக சாராயம், மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது. இதையடுத்து புதுச்சேரியில் இருந்து நேற்று மாலை விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயிலில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் சிவவடிவேல், ஜாக்குலின், ரத்தினகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னப்பன், முத்துகிருஷ்ணன், சிவராமன், சேகர் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

3 பேர் கைது

அப்போது புதுச்சேரியில் இருந்து ரெயில் மூலம் உயர்ரக மதுபாட்டில்களை கடத்தி வந்த கும்பகோணம் அருகே கர்ணக்கொள்ளை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் (வயது 44), ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த சோனாமல்லிகார்ஜூனா (36), சித்தூர் வினித் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 64 உயர்ரக மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குண்டர் தடுப்பு சட்டம் பாயும்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் ரெயில்களில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, நாங்கள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறோம். தற்போது விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்த புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கிச்செல்லும் ரெயிலில் 3 பேர், 62 மதுபாட்டில்களை எடுத்து வந்தனர். நாங்கள் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மதுபாட்டில்களை எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

மதுபாட்டில்களை தவிர்த்து, எரிசாராயம் மற்றும் கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றை எடுத்து வருகிறார்களா என்று சோதனை செய்ததில், இதுவரை அப்படி எதுவும் இல்லை. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போதை ஆசாமிகள் சிலர், மது அருந்துவதாக செய்திகள் வெளியானது. ரெயில் நிலையத்தை பொறுத்தவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. உள்ளூரை சேர்ந்தவர்கள் சிலர், ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள மறைவான பகுதிகளில் அமர்ந்து, மது அருந்த வாய்ப்புள்ளது. ரெயில்களில் மதுபானங்களை கடத்துபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்புக்குழு

வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய ரெயில்களில் கஞ்சா மற்றும் குட்கா போன்றவை எடுத்து வரப்படுகிறது. சென்னை, திருச்சி ரெயில்வே கோட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 7 ரெயில்வே துணை கோட்டங்களில் மதுபானங்கள் மற்றும் கஞ்சா, குட்கா போன்றவற்றை தடுப்பதற்கு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க டி.ஜி.பி. உத்தரவின்பேரில் 4.0 கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரெயில்களில் கடத்தி வரப்பட்ட 168 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story