நாகர்கோவிலில்தனியார் நிதி நிறுவனத்தில் 89½ பவுன் நகை திருட்டு
நாகர்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 89½ பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 89½ பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
89½ பவுன் நகை
நாகர்கோவில் கோட்டாரில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று இருக்கிறார்கள். ஆண்டு தோறும் இந்த நிறுவனத்தில் தணிக்கை நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் கடந்த 2-ந் தேதி ஏரியா மேலாளர் சிவலிங்கப்பா (வயது 31) என்பவர் நகையை தணிக்கை செய்தார். அப்போது 89½ பவுன் நகைகள் குறைவாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.33 லட்சத்து 55 ஆயிரத்து 476 ஆகும். இதுபற்றி கோட்டார் போலீசில் சிவலிங்கப்பா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
வழக்குப்பதிவு
அப்போது நிதி நிறுவனத்தின் கிளை மேலாளராக இருந்த ஜீனிஷா அவருடைய உறவினர்களை வரவழைத்து தங்க நகைகளை திருடி நிறுவனத்துக்கு நம்பிக்கை மோசடி செய்தது தொியவந்தது. இதைத் தொடா்ந்து ஜீனிஷா வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஜீனிஷா மற்றும் அவருடைய உறவினர்கள் ஜோயல், ஜினிஷா, எடிசன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக தனியார் நிதி நிறுவனத்தில் போலீசார் விசாரணை நடத்தியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.