துவார் ஊராட்சியில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்
துவார் ஊராட்சியில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகளால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். எனவே கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் 300 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தனர். இந்த நிலையில் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனர். ஆனால் கடந்த 2 மாதங்களாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் இரவு, பகலாக தங்களது நெல்லை பாதுகாத்து வருகின்றனர். மழைக்காலமாக இருப்பதால் தார்ப்பாய் போட்டு மூடியும் தண்ணீர் உள்ளே புகுந்து நெல்மணிகள் முளைத்துவிட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். தாங்கள் கடன் வாங்கி பாடுபட்டு விவசாயம் செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து விவசாயிகளின் கவலையை போக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.