ஈரோடு மாவட்டத்தில் 30,447 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்


ஈரோடு மாவட்டத்தில் 30,447 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்
x

30,447 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரத்து 447 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர். 5 ஆயிரத்து 176 பேர் தேர்வு எழுத வரவில்லை.

குரூப்-2 தேர்வு

தமிழக அரசுத்துறையில், சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப்- 2, 2-ஏ பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிர்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய தாலுகாக்களில் 61 மையங்களிலும், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர் ஆகிய தாலுகாக்களில் 56 மையங்களிலும் என மொத்தம் 117 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது.

முக கவசம்

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் நேற்று காலை 7 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். 8.30 மணிக்கு அவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஹால் டிக்கெட், பால் பாயிண்ட் பேனா மட்டுமே கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது.

தண்ணீர் பாட்டில், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது. 9 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுதும் சீட்டை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும். அதன் நடைமுறை குறித்து அந்தந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் விளக்கினர். முக கவசம் அணியாமல் வந்த தேர்வர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

தேர்வை கண்காணிக்க 8 பறக்கும் படை அலுவலர்கள், 29 நடமாடும் குழுவும், 120 ஒளிப்பதிவாளர்களும், 234 கண்காணிப்பு அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு சி.என்.சி. கல்லூரியில் நடந்த குரூப்-2 தேர்வை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

கோபி

கோபி தாலுகாவில் குரூப்- 2 ேதர்வு எழுத 8 ஆயிரத்து 794 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் 29 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 29 தேர்வு மையங்களுக்கும் 29 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர 7 மண்டல கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.

இதையொட்டி கோபி சார்நிலை கருவூலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த குரூப்-2 வினாத்தாள் நேற்று காலை 5.30 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தேர்வு நாளான நேற்று அந்தந்த தேர்வு மையங்களின் முன்பாக கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதைத்தொடர்ந்து தேர்வு எழுத வந்தவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வு எழுதினர். மொத்தம் 7 ஆயிரத்து 538 பேர் நேற்று குரூப்-2 தேர்வு எழுதினர். 1,256 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதையொட்டி தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களுக்கு சென்று கோபி தாசில்தார் ஆசியா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் குரூப் -2 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 35 ஆயிரத்து 623 பேரில் 5 ஆயிரத்து 176 பேர் தேர்வு எழுத வரவில்லை. 30 ஆயிரத்து 447 பேர் குரூப்-2 தேர்வு எழுதினார்கள்.


Related Tags :
Next Story