படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 April 2024 9:54 AM GMT (Updated: 28 April 2024 3:32 PM GMT)

படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் 8 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஷ் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் 75 லட்ச ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.

இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"மிக இளம் வயதில் 'பிடே' கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது குகேசுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.

கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்." என்று தெரிவித்துள்ளார்.


Next Story