ரெயிலில் அதிகரிக்கும் கஞ்சா கடத்தல்


ரெயிலில் அதிகரிக்கும் கஞ்சா கடத்தல்
x
தினத்தந்தி 19 Jun 2023 7:30 PM GMT (Updated: 20 Jun 2023 7:15 AM GMT)

ரெயிலில் அதிகரித்து வரும் கஞ்சா கடத்தல்

சேலம்

சூரமங்கலம்:-

சேலம் வழியாக ரெயிலில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருகிறது. நேற்று ரெயிலில் 10 கிலோ கஞ்சாவுடன் கேரளாவை சேர்ந்த வாலிபர் சிக்கினார்.

கஞ்சா கடத்தல்

வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தி வருகின்றனர்.

குறிப்பாக இந்த ரெயிலில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து சமீபகாலமாக போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக நேற்று தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே தனிப்படை போலீசார் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் வரை சோதனை நடத்தினர்.

கேரள வாலிபர் கைது

அப்போது முன்பதிவு இல்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த கைப்பை ஒன்றை கைப்பற்றி பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பையை திறந்து சோதனை செய்ததில், 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தது, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அஜிஸ் (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் இவர் விஜயவாடாவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் அஜிஸ் மற்றும் கஞ்சாவை ஒப்படைத்தனர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் விசாரணை நடத்தி, பிடிபட்ட அஜிசை சேலம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜிசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story