புதுக்கோட்டையில் ஜமாபந்தி-குடிகள் மாநாடு


புதுக்கோட்டையில் ஜமாபந்தி-குடிகள் மாநாடு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி மற்றும் குடிகள் மாநாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி,

ஜமாபந்தி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் 1431-ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி மற்றும் குடிகள் மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, வீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 106 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 46 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 695 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரேணுகாதேவி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 93 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து, நடைபெற்ற குடிகள் மாநாட்டில் சின்னதுரை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், காவிரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தின் பயனை கந்தர்வகோட்டை பகுதி மக்களும் பயன் பெறுகின்ற வகையில் கட்டளை கால்வாயின் ஒரு பிரிவையும், காவிரி-வைகை- குண்டாறு இணைப்பின் ஒரு பிரிவையும் புதிதாக உருவாக்க நீர்வள துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில், கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி

மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு கலால் மேற்பார்வை அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், பெருமருதூர், சிங்கவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. ஜமாபந்தியில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலுப்பூர்

இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு 173 மனுக்களை அளித்தனர். இதையடுத்து, காரையூர், அரசமலை, பொன்னமராவதியில் கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இதனைதொடர்ந்து நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 33 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, பட்டாமாறுதல் ஆணை, சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விராலிமலை

விராலிமலை தாலுகாவில் உள்ள கொடும்பாளூர், நீர்பழனி மற்றும் விராலிமலை ஆகிய 3 உள்வட்டங்களுக்கான ஜமாபந்தி கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 80 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதையடுத்து, குடிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்கு கலால் மேற்பார்வை அலுவலர் திருஞானம் தலைமை தாங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணை நகல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் கொடும்பாளூரை சேர்ந்த காந்தியவாதி செல்வராஜ் என்பவர் தேசிய கொடியுடன் வந்து தனது கோரிக்கை மனு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு அளித்தார்.


Next Story