விருத்தாசலத்தில் துணிகர சம்பவம்: பஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.31 லட்சம் நகை, பணம் கொள்ளை ரூ.5 லட்சம் வைர நகைகளையும் அள்ளிச் சென்றனர்


விருத்தாசலத்தில் துணிகர சம்பவம்:  பஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.31 லட்சம் நகை, பணம் கொள்ளை  ரூ.5 லட்சம் வைர நகைகளையும் அள்ளிச் சென்றனர்
x

விருத்தாசலத்தில் பஸ் உரிமையாளர் வீட்டில் ரூ. 31 லட்சம் நகை, பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கடலூர்

விருத்தாசலம்,


விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் ரோஜாப்பூ தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 65). தனியார் பஸ் நிறுவன உரிமையாளர். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, குடும்பத்தினருடன் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் குடும்பத்துடன் நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயச்சந்திரன் உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கை அறை மற்றும் பூஜை அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.

நகைகள் கொள்ளை

மேலும் பீரோக்களில் இருந்த ½ கிலோ தங்க நகைகள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் போன்றவை கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.29 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அவர் உடனடியாக விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா

தொடர்ந்து, மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது, கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி சென்று, பின்னர் மீண்டும் கொள்ளை நடந்த வீடு அமைந்துள்ள இடத்துக்கே திரும்பி வந்துவிட்டது.

கொள்ளை சம்பவம் நடந்த ஜெயச்சந்திரன் வீ்ட்டில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்கள் பற்றிய எந்த துப்பும் தற்போது துலங்கவில்லை.

அதேவேளையில் கொள்ளை சம்பவம் நடந்த தெரு பகுதியில் ஒரு சிலரது வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் பார்வையிட்டனர். ஆனால், அதிலும் சந்தேகப்படும் படியான நபர்களின் உருவம் எதுவும் பதிவாகவில்லை. இதனால் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை அடையாளம் காண்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

வலைவீச்சு

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story