மூதாட்டி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு


மூதாட்டி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
x

காரிமங்கலம் அருகே உறவினர் போல் நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உறவினர் போல் நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மூதாட்டி

காரிமங்கலம் அருகே உள்ள நாகணம்பட்டியை சேர்ந்தவர் இன்னாசி அம்மாள்(வயது 80). இவரது மகள் மிராசிமேரி. இவர் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மூதாட்டி மகளுடன் வசித்து வருகிறார். நேற்று காலை மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார்.

அவர் மூதாட்டியிடம் உறவினர் எனவும், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அந்த மர்ம பெண் குடிக்க தண்ணீர் கேட்டதால் வீட்டிற்குள் சென்று தண்ணீர் குடிக்குமாறு மூதாட்டி கூறியுள்ளார். அப்போது உள்ளே சென்ற மர்ம பெண் பீரோவைத் திறந்து 7 பவுன் நகையை எடுத்துக்கொண்டு அங்கு நின்றிருந்த காரில் ஏறி சென்று விட்டார்.

நகை திருட்டு

பின்னர் மூதாட்டி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து இருப்பதும், அதில் இருந்த 7 பவுன் நகையை அந்த பெண் திருடி சென்றதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உறவினர் போல் நடித்து நகையை திருடி சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story