தொழிலாளி சாவுக்கு நீதிகேட்டுமாமியார்-மருமகள் தீக்குளிக்க முயற்சி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி சாவுக்கு நீதி கேட்டு மாமியார், மருமகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்த கண்ணன் மனைவி புவனேஸ்வரி (வயது 34). இவர் தனது மாமியார் காளியம்மாள் (59) மற்றும் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். நுழைவு வாயில் அருகில் காளியம்மாள் ஒரு பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றினார். அருகில் நின்ற புவனேஸ்வரி மீதும் ஊற்றினார். பின்னர் அவர்கள் தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். கையில் வைத்திருந்த குழந்தையின் உடலிலும் மண்எண்ணெய் பட்டதால் குழந்தை மீதும் போலீசார் தண்ணீரை ஊற்றினர்.
நீதி கேட்டு மனு
தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து புவனேஸ்வரியிடம் போலீசார் கேட்டனர். அப்போது அவர் கூறும்போது, 'எனது கணவர் கூலித்தொழிலாளி. எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் அவர்களின் வீட்டு வேலைக்கு எனது கணவரை அழைத்துச் சென்றனர். மிகவும் ஆபத்தான வேலை என்று அதை பார்க்க முடியாது என எனது கணவர் திரும்பினார். ஆனால், அவர்கள் கட்டாயப்படுத்தி வேலையில் ஈடுபடுத்தினர்.
அப்போது அவர் கட்டிடத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார். தீண்டாமை கடைபிடித்து அவருக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. பின்னர் அவர் இறந்து விட்டார். இந்த சாவுக்கு நீதிகேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. அதனால், தற்கொலைக்கு முயன்றோம்' என்றார்.
பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.