'தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள் என்பதால் தமிழகத்தில் எந்த குளத்திலும் தாமரை மலராது' என்று கனிமொழி எம்.பி. கூறினார்


தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள் என்பதால் தமிழகத்தில் எந்த குளத்திலும் தாமரை மலராது என்று கனிமொழி எம்.பி. கூறினார்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:46 PM GMT)

‘தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள் என்பதால் தமிழகத்தில் எந்த குளத்திலும் தாமரை மலராது’ என்று கனிமொழி எம்.பி. கூறினார்

தூத்துக்குடி

'தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள் என்பதால் தமிழகத்தில் எந்த குளத்திலும் தாமரை மலராது' என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

குடிநீர் பிரச்சினை

தூத்துக்குடியில் நடந்த பஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. இந்த மாவட்டம் முழுவதும் தண்ணீர் பிரச்சினையே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் உறுதி அளித்து உள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தம் கிடையாது

தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையம் கட்டிட பணிகளை விரைந்து, சிறப்பாக முடிக்க வேண்டும் என்று பலமுறை ஆய்வு செய்து உள்ளோம். ஒரு ஊரில் பஸ் நிலையம் என்பது அந்த ஊரின் அடையாளம். மக்களின் வாழ்க்கையோடு இணைந்து இருக்கும். இதிலும் அரசியல் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். எந்த இடத்தில் பிரச்சினையை கிளப்பலாம் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இங்கேயும் சிலர் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

எந்த திட்டமும் மத்திய அரசுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. எல்லா திட்டத்திலும் மாநில அரசின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. அதனை யாரும் மறுக்க முடியாது. இதில் எங்கள் உழைப்பும் உள்ளது. நீங்கள் கொடுக்கின்ற பணம், நாங்கள் கொடுக்கும் ஜி.எஸ்.டி. வரிப்பணம்தான். அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு பெயர் வைத்துக் கொள்கிறது.

தாமரை மலராது

தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள். நிச்சயமாக எந்த மாற்றமும் இங்கு வராது. தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது.

விழிப்போடு இருங்கள். தமிழகத்தை காப்பாற்றுங்கள். நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து அரணாக நின்று தமிழகத்தை தமிழ் உணர்வோடு காப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தங்கம் தென்னரசு

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், 'தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி கேந்திரமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இருக்கும். இதனால் டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது. பர்னிச்சர் பார்க்கில் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. விரைவில் தொழில்கள் தொடங்கப்படும்.

அதேபோன்று கிரீன் அம்மோனியா தயாரிப்பு நிறுவனங்களும் வர உள்ளன. நிச்சயமாக இந்த பகுதி தொழில் வளர்ச்சிக்கு துணை நிற்போம்' என்றார்.

கீதாஜீவன்

அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, 'தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தூத்துக்குடிக்கு ரூ.200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. சாலைகள் குறுகலாக அமைக்கப்பட்டு வந்தன. அதனை மாற்றி சாலைகளை விரிவுபடுத்தி உள்ளோம். அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று கூடுதல் நிதி பெற்று பணிகளை நிறைவேற்றி உள்ளோம்.

இதேபோன்று அறிவியல் தொழில்நுட்ப பூங்கா 27 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்து உள்ளது. இதற்கு முழுமையாக இடம் தேர்வு செய்து, நாம் தான் கட்டி முடித்து உள்ளோம். இந்த திட்டங்களை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று யாரும் உரிமை கோரமுடியாது. மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 4-ம் கேட்டில் ஒரு ரெயில்வே மேம்பாலமும், கருத்தப்பாலம் பகுதியில் ஒரு பாலமும் அமைக்க வேண்டும்' என்று கூறினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, 'தமிழகத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ, அதனை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடிக்கு பல திட்டங்கள் வந்து உள்ளன. தூத்துக்குடி மாநகரம் பல வளர்ச்சியை பெற்று உள்ளது. இதனை பொதுமக்கள் பாராட்டுகிறார்கள்' என்றார்.


Next Story