விவசாயியை கொன்ற தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


விவசாயியை கொன்ற தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

அரியலூர்

தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு

அரியலூர் மாவட்டம் செட்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53), விவசாயி. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பிக்கும் (62) இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சுப்பிரமணியன் குத்தகைக்கு எடுத்து பருத்தி பயிர் செய்து வந்த நிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், சின்னத்தம்பிக்கும் இடையே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்தம்பி, அவரது மகன் ராஜமாணிக்கம் (43) ஆகியோர் சுப்பிரமணியனின் தலையின் பின்பக்கம் மண்வெட்டியால் அடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதையடுத்து, திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்தம்பி மற்றும் அவரது மகன் ராஜமாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி விவசாயியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சின்னத்தம்பி மற்றும் அவரது மகன் ராஜமாணிக்கத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் குடும்பத்திற்கு சின்னத்தம்பி தரப்பினர் ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சின்னத்தம்பி மற்றும் அவரது மகன் ராஜமாணிக்கத்தை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story