வாலிபருக்கு ஆயுள் தண்டனை


வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலூர்

மாணவியுடன் காதல்

அரியலூர் மாவட்டம், உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 22). இவர் தனது பெரியம்மாள் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், 12 வயதுைடய 7-ம் வகுப்பு மாணவியிடம், அவரை காதலிப்பதாகவும், அவர் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து 2 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர்.

அவர்கள் தனியாக சந்தித்தபோது லட்சுமணன் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் மாணவியை கண்டித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி லட்சுமணனுடன் பழகுவதை தவிர்த்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

இந்நிலையில் கடந்த 17.7.2002 அன்று அந்த மாணவியை இரவில் தன்னுடன் வரவில்லை என்றால், அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று லட்சுமணன் மிரட்டி, அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து மறுநாள் அந்த மாணவியை லட்சுமணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், லட்சுமணனுக்கு சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து லட்சுமணனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story