நீண்டகாலமாக விவசாயம் செய்து வாழும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்:மலைக்கிராம மக்கள் கோரிக்கை


நீண்டகாலமாக விவசாயம் செய்து வாழும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்:மலைக்கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:45 PM GMT)

அரசரடி, மஞ்சனூத்து கிராமங்களில் நீண்ட காலமாக விவசாயம் செய்து வாழும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்தனர்.

தேனி

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில்ஆண்டிப்பட்டி தாலுகா, மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, மஞ்சனூத்து மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பட்டா வேண்டும்

அரசரடி, மஞ்சனூத்து பகுதிகளில் பல ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். தற்போது வனத்துறையினர் இந்த பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாகவும், புலிகள் காப்பகம் என்றும் அறிவித்துள்ளனர். கடந்த 1 ஆண்டாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்தது போல், மேகமலை, தும்மக்குண்டு ஊராட்சிகளில் உள்ள நாங்கள் நீண்டகாலமாக விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும். தவறும்பட்சத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 3 ஏக்கர் நிலமும், 3 சென்ட் பசுமை வீடும் வழங்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ரு.30 லட்சம் வாழ்வாதாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

சாலை சீரமைப்பு

வீரபாண்டியை சேர்ந்த அறிவழகன் என்பவர் கொடுத்த மனுவில், 'வீரபாண்டி பைபாஸ் சாலை முதல் போடி விலக்கு வரை 3 கி.மீ. தூரம் சாலையோரம் புதிதாக சாலை அமைக்க தோண்டிய பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சரி செய்ய மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'பங்களாமேட்டில் முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு சந்திக்கும் கூட்டாறு பகுதிக்கு செல்லும் பாதை புதர்மண்டிக் கிடக்கிறது. இந்த பகுதியில் முன்னோர்கள் வழிபாடுகள் நடத்தி வந்தனர். தற்போது தினமும் இங்கு ஏராளமான மக்கள் குளிக்க, துணி துவைக்க வருகின்றனர். இந்த பாதையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story