2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
மதுரை-ராமேசுவரம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.
மதுரை,
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுரை-ராமேசுவரம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் மதுரை-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
பயணிகளின் கோரிக்கையை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மதுரை-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. அதன்படி இன்று (30-ந் தேதி) மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயில் காலை 10:15 மணிக்கு ராமேசுவரத்துக்கு சென்றடைந்தது.
இந்த ரெயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜ கம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, உச்சிப்புளி, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
மதுரை-ராமேசுவரம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுவது, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரெயிலில் பயணிகள் மிகவும் உற்சாகமாக பயணம் செய்தனர்.