ராகுல்காந்தியின் தமிழக பாதயாத்திரையில் பல சுவாரசிய சம்பவங்கள்...!


ராகுல்காந்தியின் தமிழக பாதயாத்திரையில் பல சுவாரசிய சம்பவங்கள்...!
x

ராகுல்காந்தியின் தமிழக பாதயாத்திரையில் பல சுவாரசிய சம்பவங்கள் நடந்துள்ளன.

கன்னியாகுமரி,

தமிழகத்தில் 4 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் முடித்தார். ராகுல்காந்தியின் தமிழக பாதயாத்திரையில் பல சுவாரசிய சம்பவங்கள் நடந்துள்ளன.

சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி

ராகுல்காந்தி பாதயாத்திரையின் போது படந்தாலுமூட்டில் சாலையோரம் இருந்த டீ கடைக்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு நாற்காலியில் அமர்ந்து டீ, பிஸ்ெகட் சாப்பிட்டார். அப்போது கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த ஒருவரை அழைத்து தனது அருகில் அமர வைத்து அவரிடம் சிறிது நேரம் ஜாலியாக உரையாடினார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். மாலை 5.45 மணிக்கு டீ கடைக்கு சென்ற ராகுல்காந்தி 6.05 மணி வரை அங்கேயே இருந்தார். அதன் பிறகு மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார்.

தொண்டர்களின் ஆசையை நிறைவேற்றினார்

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று மதியம் ராகுல்காந்தி ஓய்வெடுத்தார். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்கள் ராகுல்காந்தியுடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டனர். இந்த ஆசையை காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். பின்னர் இது ராகுல்காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவரும் சம்மதம் தெரிவித்து வெளியே வந்து தொண்டர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். ராகுல்காந்தியின் எளிமையை பார்த்து தொண்டர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

மாற்றுத்திறனாளிகள், மீனவர்களுடன் சந்திப்பு

பாதயாத்திரைக்கு இடையே ஓய்வில் இருந்த போது மாற்றுத்திறனாளிகளை சந்தித்து ராகுல்காந்தி பேசினார். அப்போது, "மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு முறையாக நடத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் குறித்த விவரங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் தனி இட ஒதுக்கீடு மற்றும் காங்கிரஸ் கட்சியில் மாற்று திறனாளிகளுக்கு தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

இதேபோல் மீனவர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, "மத்திய அரசு மீன்வள திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து மீனவர்களிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை. குமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு மீனவர்கள் உயிர் இழந்து வருகிறார்கள். எனவே மீன்பிடி துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். கடலில் காணாமல் போகும் மீனவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கு ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்" என்றனர்.

வித்தியாசமான முறையில் வரவேற்பு

குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரசார் மாவட்ட தலைவர் டைசன் தலைமையில் ராகுல்காந்தியை வித்தியாசமாக வரவேற்றனர். அதாவது இரவிபுதூர்கடை சந்திப்பு பகுதியில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த 78 இளைஞர்கள் தங்களது உடல் முழுவதும் காங்கிரஸ் கொடியின் வண்ணத்தை பெயிண்டால் பூசியவாறு வரிசையாக நின்றனர். மேலும் உடலில் வெல்கம் டூ ராகுல் ஜி என்றும், இந்திய ஒற்றுமை பயணத்தை குறிக்கும் வகையில் பாரத் ஜோடா யாத்ரா என்றும் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. இந்த வாசகங்களில் இடம் பெற்ற ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒவ்வொருவர் உடலில் எழுதப்பட்டிருந்தது. இது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

முதியவரின் சிலம்பாட்டத்தை ரசித்த ராகுல்காந்தி

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்ட பயிற்சி பெற்ற கலைஞர்கள் சிலர் ராகுல்காந்தியை பார்ப்பதற்காக சாலையோரம் நின்றிருந்தனர். அவர்களைக் கண்டதும் ராகுல் காந்தி, அவர்களையும் அழைத்துப்பேசி மகிழ்வித்தார். அப்போது ராகுல்காந்தி முன்பு காட்டாத்துறை தும்பையன் கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ் (வயது 65) என்ற முதியவர் சில நிமிடங்கள் சிலம்பாட்டம் ஆடிக் காட்டினார். இதை ராகுல்காந்தி ரசித்ததோடு, அவரையும் பாராட்டியபடி நடந்து சென்றார்.

சிறுமி நெகிழ்ச்சி

ராகுல்காந்தி பாதயாத்திரையாக சென்ற போது முளகுமூடு பகுதியை சேர்ந்த கிரிஸ்வின் ரிஸ்விகா என்ற சிறுமி கையில் பூக்களுடன் காத்திருந்தார். இதனை கவனித்த ராகுல்காந்தி அவரை கூப்பிட்டார். உடனே சிறுமி தன்னுடைய தந்தையுடன் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது சிறுமி தனது ஒரு கரத்தை ராகுல் காந்தி பிடித்திருக்க, மற்றொரு கரத்தை அவளுடைய தந்தை பிடித்திருக்க சிறிது தூரம் ராகுலுடன் நடந்து சென்றார். அப்போது ராகுல், அந்த சிறுமியிடம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி டாக்டருக்கு படித்து அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதைக் கேட்டவுடன் ராகுல்காந்தி அந்த சிறுமியை வாழ்த்தி, பாராட்டிச் சென்றார். முதல் நாள் ராகுல்காந்தியை பார்க்க முடியாத சிறுமி, 2-வது நாள் காத்திருந்து அவரை சந்தித்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Next Story