ஸ்டான்லி ஆஸ்பத்திரி லிப்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிக்கியதால் பரபரப்பு
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் மாட்டிக்கொண்ட மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் பத்திரமாக மீட்க்கப்பட்டனர்.
சென்னை,
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். நிகழ்ச்சி நிறைவு பெற்றதை அடுத்து 3-வது தளத்திலிருந்து தரை தளத்திற்கு லிப்டின் மூலம் அமைச்சர், அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் வந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் திடீரென்று லிப்டின் இயக்கம் தடைபட்டது. இதனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் 'ஐட்ரீம்' மூர்த்தி, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, சுகாதார துறை செயலாளர் செந்தில் குமார், மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் சாந்தி மலர் ஆகியோர் லிப்டில் சிக்கி கொண்டனர்.
இந்தநிலையில் லிப்ட் ஆபரேட்டர் உதவியுடன் லிப்டின் ஆபத்து கால கதவின் வழியே, சிக்கிகொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 10 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின் லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர் மற்றும் உடனிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் லிப்டை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.