அன்புஜோதி ஆசிரமத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஆய்வு


அன்புஜோதி ஆசிரமத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 22 March 2023 6:45 PM GMT (Updated: 22 March 2023 6:45 PM GMT)

விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஆசிரம நிர்வாகிகள், பணியாளர்கள் அடித்து துன்புறுத்தியது, அங்குள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த சிலர் காணாமல் போயிருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அம்பலமானது.

இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 6 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அன்புஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்கள் வசம் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய புலனாய்வு பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பாலிராம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், விழுப்புரத்தில் முகாமிட்டு அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 20 பேர் மற்றும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஆகியோரிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்றும் 2-வது நாளாக தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் தங்கள் விசாரணையை தொடர்ந்தனர். அவர்கள், குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். ஆசிரமத்தில் உள்ள 2 அறைகளுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற அறைகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆசிரமத்தின் அருகில் வசித்து வருபவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்துகொண்டனர்.


Next Story