போடி அருகே சாலையில் கற்களை வைத்து அ.தி.மு.க. கவுன்சிலர் போராட்டம்


போடி அருகே  சாலையில் கற்களை வைத்து அ.தி.மு.க. கவுன்சிலர் போராட்டம்
x

போடி அருகே சாலையில் கற்களை வைத்து அ.தி.மு.க. கவுன்சிலா் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேனி

மின் வயர்கள் துண்டிப்பு

போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை வாய்க்கால் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கேரளாவுக்கு செல்லும் பஸ், லாரி உள்பட அனைத்து வாகனங்களும் போடி 6-வது வார்டு உழவர் சந்தை 100 அடி சாலை வழியாக சென்று வருகின்றன.

மேலும் கனரக வாகனங்களும் அந்த வழியாக சென்று வருகின்றன. இ்ந்த கனரக வாகனங்களால் அடிக்கடி மின் வயர்கள் துண்டிக்கப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், அ.தி.மு.க. கவுன்சிலர் கலைச்செல்வி ஆகியோர் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

சாலை மறியல்

ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலா் மற்றும் பொதுமக்கள் அந்த சாலையில் கற்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம் ஆனந்த், மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாழ்வாக செல்லும் மின்வயர்களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான செலவை நகராட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கவுன்சிலர் கூறினார். பின்னர் அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story