கடமலைக்குண்டு அருகேதடுப்பணைகளில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்கள்:அயிரை மீன் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை


கடமலைக்குண்டு அருகேதடுப்பணைகளில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்கள்:அயிரை மீன் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:45 PM GMT)

கடமலைக்குண்டு அருகே தடுப்பணைகளில் தூண்டில் போட்டு இளைஞர்கள் மீன் பிடித்து வருகின்றனர். ஒரு கிலோ அயிரை மீன் ரூ.1,000-க்கு விற்பனையாகிறது.

தேனி

வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகி கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்கள் வழியாக சென்று தேனி அருகே குன்னூர் கிராமத்தில் முல்லைப்பெரியாற்றில் சேர்ந்து வைகை அணையில் கலக்கிறது. தொடர் மழையின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூலவகை ஆற்றில் நீர்வரத்து காணப்பட்டது. அதன் காரணமாக ஆற்றில் கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, அயிரை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் பெருகின. இந்த நிலையில் போதிய அளவில் மழை இல்லாததால் கடந்த மாதம் முதல் ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் நீர்வரத்து முற்றிலுமாக நின்று போனது. தற்போது ஆற்றில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நீரில் மீன்கள் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடமலைக்குண்டு அருகே உள்ள தடுப்பணைகளில் தேங்கியுள்ள நீரில் தூண்டில் மற்றும் வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து வருகின்றனர்.

இதேபோல் தேனி, வீரபாண்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீன் வியாபாரிகள் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு வந்து மீன் பிடித்து வருகின்றனர். ஆற்றில் பிடிக்கப்படும் அயிரை மீன் கிலோ ரூ.1,000-க்கு விற்னையாகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவு தற்போது வைகை ஆற்றில் அயிரை மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாகவும், ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் தடுப்பணைகளில் நீர்மட்டம் மேலும் குறைந்து அயிரை மீன்கள் அதிக அளவில் பிடிபடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story