காஞ்சிக்கோவில் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
காஞ்சிக்கோவில் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது.
பெருந்துறை
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 54). இவர் பெருந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2-ந் தேதி காலையில் மாதேஸ்வரனும், அவருடைய மனைவியும் துணி எடுப்பதற்காக ஈரோட்டுக்கு வந்தனர். பின்னர் துணி எடுத்துவிட்டு அவர்கள் 2 பேரும் மாலையில் மீண்டும் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு கிடந்ததுடன், அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் 2 தங்க காசுகள் ஆகியவற்றை காணவில்லை. ஆட்கள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.