நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்: நாளை திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நாளை அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"நீட்" தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் "நீட் விலக்கு, நம் இலக்கு" எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நேற்று (21.10.2023) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.
நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில், நாளை (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியளவில், "தி.மு.க.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்" காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.