'என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும்' ஐகோர்ட்டு எச்சரிக்கை


என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும் ஐகோர்ட்டு எச்சரிக்கை
x

‘தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக மதுரை வக்கீல் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும்' என சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

சென்னை,

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கிடையே மேல் விசாரணைக்கு அனுமதி கோரி என்.ஐ.ஏ. மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில், மதுரையைச்சேர்ந்த வக்கீல் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஐகோர்ட்டில் மனு

தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும் வக்கீல் முகமது அப்பாஸ், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி, லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முகமது அப்பாஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், என்.ஐ.ஏ.வுக்கு எதிராக முகநூலில் சில கருத்துகளை தெரிவித்ததற்காகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக கோர்ட்டில் ஆஜரானதற்காகவும் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என வாதிடப்பட்டது.

போதுமான ஆதாரங்கள் கிடைத்ததால் வழக்குப்பதிவு செய்து மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ஆதாரங்கள் குறித்து விரிவான பதில் மனுத்தாக்கல் செய்வதாக என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எச்சரிக்கை

விசாரணையின் போது நீதிபதிகள், 'மேல் விசாரணைக்கு அனுமதி கோரி என்.ஐ.ஏ. மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் என்.ஐ.ஏ. அதிகார துஷ்பிரயோகம் செய்தால் அதை இந்த நீதிமன்றம் தீவிரமாக கருதும்' என எச்சரிக்கை விடுத்தனர்.

இதன்பின்பு என்.ஐ.ஏ. தரப்பு விளக்கத்தை கேட்காமல் விசாரணைக்கு தடை விதிக்கமுடியாது எனத்தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி என்.ஐ.ஏ.வுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.


Next Story