வட மாநிலத்தவர்கள் விவகாரம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை திசை திருப்பும் வேலை- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு


வட மாநிலத்தவர்கள் விவகாரம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை திசை திருப்பும் வேலை- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
x

வட மாநிலத்தவர்கள் விவகாரம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை திசை திருப்பும் வேலை என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழகத்தின் அரசியல் பற்றி தெரியாது. ஒரு காலத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொன்னோம். அதனை மறுக்கவில்லை. ஆனால் இன்று தெற்கு வாழ்கிறது. வடக்கு அதனை பின்பற்றுகிற நிலையில் உள்ளது. இது திராவிட இயக்கம் செய்த மாபெரும் சாதனை. இந்தியாவுக்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. தமிழக அரசியலை பற்றி அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள விவகாரத்தில், பீகார் சட்டப்பேரவையில் துணை முதல்-மந்திரியே வட மாநிலத்தினர் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார் என்று கூறியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலின் வெற்றியை திசை திருப்புவதற்காக சில குள்ள நரிகள் செய்கிற வேலை இது. அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான வழக்கில் அவசர கோலத்தில் எதுவும் செய்ய முடியாது. ஒன்றன் பின் ஒன்றாக தான் நடவடிக்கை வரும். தற்போது தான் காவல்துறையினர் இந்த வழக்குகளை ஒவ்வொன்றாக எடுத்து வருகின்றனர். தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி... என ஒவ்வொருவர் மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக நடவடிக்கை வரும். பொறுத்திருந்து பார்க்கவும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story