கோவை அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படங்கள் அகற்றம்...!
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அகற்றினர்.
கோவை,
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், திட்டமிட்டபடி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. இரட்டை தலைமை பதவியை ரத்து செய்தும், , இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தமிழகம் முழுவதும் உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கோவை அண்ணா சாலையில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை, 10-க்கும் மேற்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வெளியே தூக்கி எறிந்து கட்சி அலுவலக வாசலில் அவற்றை உடைத்தும், அடித்து நொறுக்கியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.