ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முப்பெரும் விழா மாநாடு


ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முப்பெரும் விழா மாநாடு
x

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடந்தது.

திருச்சி

அ.தி.மு.க.வில் பிளவு

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரட்டை தலைமையாக இருந்து கட்சியை வழிநடத்தி வந்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, கட்சிக்கு ஒற்றை தலைமையே வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் கோர்ட்டு தீர்ப்பின்படி, எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என்பதை காட்டும் வகையில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர்.

முப்பெரும் விழா

அதன்படி திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) மாநாடு நடக்க இருக்கிறது. எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா பிறந்த நாள் விழாக்கள், அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுவிழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்று பேசுகிறார். முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மனோஜ்பாண்டியன், அய்யப்பன், ஜே.சி.டி.பிரபாகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இரவு 7.30 மணிக்கு மேல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார். மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்களை அழைத்து வருவதற்காக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளுக்கு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைமை அலுவலக தோற்றத்தில் மேடை

அனைத்து பகுதிகளில் இருந்து மாலை 5 மணிக்குள் மாநாடு நடைபெறவுள்ள மைதானத்துக்கு வந்து சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. பிரமாண்ட கட்அவுட்களும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த மேடை அ.தி.மு.க. தலைமை அலுவலக முகப்பு தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அந்த கட்சியினர் நேற்று முன்தினம் புகார் கொடுத்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. தலைமை அலுவலக தோற்ற வடிவிலேயே மேடையின் முகப்பை அமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story